திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நமது தேசியப் பறவையான மயில் இறைச்சிக்காக தொடர்ந்து வேட்டையாடப்படுவதும், நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், மாவட்ட வன அலுவலர் சுஜாதாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மணப்பாறை வனச்சரகர் மாதேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினர், புதுப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வீட்டின் உரிமையாளர் தங்கராசு இரண்டு மயில்களைக் கொன்று இறைச்சிக்காக தயார் செய்துகொண்டிருந்தபோது வனத்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தங்கராசு முன்னாள் ராணுவ வீரர் என்பதும், தற்போது துவரங்குறிச்சியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காவலாளியாக பணியாற்றுவதும் தெரியவந்தது.
மேலும், அவர் வைத்திருந்த இரட்டைக் குழல் துப்பாக்கி மூலம் இறைச்சிக்காக அவ்வப்போது மயில்களை வேட்டையாடியதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் அவரிடமிருந்த இரட்டைக் குழல் துப்பாக்கியை பறிமுதல் செய்து, அவரை மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முன்னாள் ராணுவ வீரர் ஒருவரே தேசியப் பறவையை துப்பாக்கியால் வேட்டையாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கிணற்றுக்குள் தத்தளித்த மயில் குஞ்சுகள் பத்திரமாக மீட்பு - பாராட்டு மழையில் தீயணைப்புத்துறை!