திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை சாக்கடைக் கழிவுகளுக்கு மத்தியில் உள்ளது. இதை பேருந்து நிலையத்தின் மையத்தில் வைக்குமாறு இரண்டு வருடங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையரிடம் மதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் கடந்த 4ஆம் தேதி நடந்த மணப்பாறை நகர, ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பேருந்து நிலையம் முன்பு மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மதிமுக செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தார்.
அப்போது, "அவமதிக்காதே... அவமதிக்காதே, அண்ணா சிலையை அவமதிக்காதே... தமிழக அரசே.. தமிழக அரசே.. பேருந்து நிலையத்தின் மையத்தில் உயர்ந்த பீடத்தில் அண்ணா சிலையை உயர்த்திடு" என முழக்கங்கள் எழுப்பினர்.