திருச்சி : கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மாவட்ட சித்த அலுவலர் காமராஜ் கரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதில், ”கரோனா 3ஆவது அலை தாக்குதல் வர இருப்பதாகவும், அது குழந்தைகளை குறிவைத்து தாக்கும் என்றும் பரவலாக சமூகவலைதளங்களில் பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
எதிர்ப்பு சக்தியை உருவாக்க மருந்து கிடையாது
உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களையும், ஏற்கனவே ஏதும் நோய் உள்ளவர்களை மட்டுமே தொற்று பாதிக்கும். உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்க மருந்து கிடையாது. இதற்காக மருத்துவமனையேயோ, மருத்துவரையோ தேடி செல்ல முடியாது. உணவுதான் மருந்து. எதிர்ப்பு சக்தி உருவாக்க நல்ல சத்தான உணவு வகைகளை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.
யோகா, தியானம் போன்ற உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும். 8 மணிநேர தூக்கம், மன மகிழ்ச்சியுடன் வாழுதல் போன்றவை நோய் எதிர்ப்பு சக்திகளை உடலில் உருவாக்கும். தற்போது மூலிகை சிக்கன் என்று விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அரசு எவ்வித அனுமதியும் வழங்கப்படுவது கிடையாது.
மருத்துவர்களின் ஆலோசனை
துளசி, அருகம்புல் போன்ற மூலிகைகளை உணவாக வழங்கி வளர்க்கலாம். அதனால் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எதையும் பயன்படுத்தக்கூடாது. பிராய்லர் முட்டை, கோழி போன்றவை உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.
நிலவேம்பு கசாயத்தை பருக வேண்டும்
எல்லா நோய்க்கும் குணமளிக்கக்கூடிய நிலவேம்பு கசாயத்தை குடும்பத்தில் உள்ள அனைவரும் பருக வேண்டும். தினமும் காலை வெறும் வயிற்றில் நிலவேம்பு கசாயத்தை பருக வேண்டும். இத்தகைய பிற நோய்களுக்கு மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களும் இந்த கசாயத்தை தொடர்ந்து குடிக்கலாம்” என்றார்.
இதையும் படிங்க: இளசுகளே உஷார்- கோவிட் 3ஆம் அலை!