திருச்சி: கும்பகோணத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து முதலீடுகளை பெற்று 300 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக தனியார் நிறுவனத்தின் மீது பொது மக்கள் திருச்சி ஐஜி அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளனர்.
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு அர்ஜுன் கார்த்திக் என்பவர் ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை நடத்தி வந்து உள்ளார். இந்நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கிளைகள் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன.
இந்நிறுவனம் பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 18 மாதங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வட்டி எனவும், இதே தொகை 24 மாதங்களுக்கு செலுத்தினால் பத்தாயிரம் ரூபாய் வட்டி மற்றும் ஒரு கிராம் தங்க நாணயம் ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இரண்டு லட்ச ரூபாய் செலுத்தினால் ஐந்து ஆண்டுகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் வட்டி, இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 25 ஆயிரம் ரூபாய் வட்டி என கவர்ச்சிகரமாக திட்டங்களை அறிவித்து மக்களிடம் இருந்து பணத்தை நிறுவனம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த முதலீடுகளை அந்நிறுவனம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக முகவர்களை பணியமர்த்தி அவர்கள் மூலமாக தொகையை முதலீடாக பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது பணம் கொடுத்தவர்கள் நிறுவனத்தின் மீது எழுந்த சந்தேகத்தின் பேரில் பனம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து கேள்வி கேட்டு உள்ளனர். நாளுக்கு நாள் சந்தேகம் அதிகரிக்க வசூல் முகவர்கள் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ள தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதியிலும் ஏற்கனவே காவல்துறையிடம் புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.
மனு அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "எங்களிடம் பணம் வாங்கி வசூல் செய்துவிட்டு தற்பொழுது அர்ஜுன் கார்த்திக் மற்றும் எவாஞ்சலின் அவிலா தெரசஸ் ஆகிய இருவரும் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு பணத்தை திருப்பி தர மறுக்கின்றனர். முதலீட்டாளர்கள் எங்களிடம் தொடர்ந்து பணத்தை கேட்பதால் வேறு வழியின்றி தற்பொழுது காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம்" என தெரிவித்தனர்.
இந்த நிறுவனத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 1 லட்சம் முதல் 30 லட்ச ரூபாய் வரை மூதலீடாக அர்ஜுன் கார்த்திக் பெற்றதாக புகார் மனு அளித்தவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இந்நிலையில் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் பணத்தை திரும்பப் பெற்றுத்தறுமாரு பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து உள்ளனர்.