திருச்சி: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, திருச்சியில் உள்ள கடை வீதிகளில் ஸ்டார் விற்பனை களைகட்டி வருகின்றன. ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் தேதி இயேசு கிறிஸ்து பிறப்பை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கிறிஸ்துமஸ் வருகையையொட்டி வீடுகள், அலுவலகங்கள், தேவாலயங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்றவற்றை செயற்கை மாட்டுத் தொழுவத்தால் அலங்கரித்து, அதில் இயேசு கிறிஸ்து பிறப்பை வெளிப்படுத்தும் வகையில், சிறு பொம்மைகள் வைத்து அழகுபடுத்துவர். மேலும், வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம் அமைப்பது, வாசலில் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பேப்பரால் செய்யப்பட்ட நட்சத்திரங்களைத் தொங்க விடுவது போன்றவற்றை மேற்கொள்வர்.
இந்த மாதத்தில் ஒவ்வொரு தேவலாயங்களில் இருந்தும், கிறிஸ்துமஸ் தாத்தாவாக உடையணிந்தவர்கள் வீடுகளுக்கு வருகை புரிந்து, குழந்தைகளுக்குப் பரிசுகள் மற்றும் இனிப்புகளை வழங்கி தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக் கொள்வர்.
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 24ஆம் தேதி நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு, இயேசு கிறிஸ்து பிறப்பை வரவேற்று வெகு விமர்சையாக கொண்டாடுவர். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி என்.எஸ்.பி சாலை அல்லிமால் பகுதியில் உள்ள ஸ்டார் விற்பனை நிலையங்கள் தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளன.
இது குறித்து கடையின் உரிமையாளர் ராகுல் ராஜ் கூறியதாவது, “இயேசு கிறிஸ்துவின் பிறப்பைச் சித்தரிக்கும் வகையிலான குடில்கள், வண்ண வண்ண நட்சத்திரங்கள், அலங்கார மின் விளக்குகள், கிறிஸ்துமஸ் மரம், புது விதமான தோரணங்கள் போன்றவற்றை வைத்து வீட்டில் அலங்கரிப்பதற்காக ஏராளமான பொருட்கள், புது விதமான வடிவமைப்பில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் புத விதமான அழகுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. கிறிஸ்துமஸ் பொருட்கள் ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: நெல்லை கனமழை வெள்ளத்தால் இதுவரை 7 பேர் உயிரிழப்பு.. மாவட்டம் முழுவதும் 70,000 ஏக்கர் விளை நிலங்கள் சேதம்!