திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் சித்திரைத்தேர் திருவிழா கொடி ஏற்றம் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாரியம்மன் வீதியுலா வந்தார்.
தேர்த்திருவிழா இன்று காலை 10.30 மணி அளவில் துவங்கியது. நேற்று காலை முதலே திருச்சி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடம், அலகு, அக்னிச்சட்டி போன்ற நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர்.
இந்த திருவிழாவில் பல பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி கடுமையான விரதம் மேற்கொண்டு பாத யாத்திரையாக சமயபுரம் கோயிலுக்கு வருகை புரிவது வழக்கம். அதன் பின்னர் தெப்பக்குளத்தில் நீராடி, அங்கிருந்து காவடி எடுத்து, அக்னி சட்டி தூக்கி, அலகு குத்தி, எனப் பல விதமான வேண்டுதல்களை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பின்பற்றுவார்கள்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவின்போது சாமி தரிசனம் செய்வார்கள். பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி சுமார் 15 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து காவல் துறையினர் கண்காணித்து பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட காவல்துறை சார்பில் சுமார் 1200 போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
மேலும் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர் மோர் பந்தல் எனப் பல்வேறு வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: AK62 அப்டேட் வேண்டும்.. திருச்சி அஜித் ரசிகர்களின் அட்ராசிட்டி!