திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வயலூர் அருகே எட்டரை கோப்பு கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் அக்கட்சியைச் சேர்ந்த குஷ்பு கலந்துகொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடையே கூறுகையில், " கருணாநிதி இல்லாமல் முதல் முறையாக ஸ்டாலின் தேர்தலை சந்திக்கிறார். இந்த நிலையில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின் எப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை. ஜெயலலிதா இல்லாமல் அதிமுக தேர்தலை சந்தித்தாலும், கடந்த நான்கு ஆண்டுகாலமாக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் மீது எந்தக் குறையையும் யாராலும் கூற முடியவில்லை. அவர் மீதான எதிர்மறை கருத்துகளும் இல்லை.
கருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிட முடியாது. கருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் மட்டுமல்ல யாராலும் நிரப்ப முடியாது. சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் கருத்துகளை கூறலாம். ஆனால் அது தேர்தலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
பெண்கள் குறித்து அவதூறாக உதயநிதி பேசிவிட்டு மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று கூறுவது சரியல்ல. தாத்தாவுக்கு இப்படி ஒரு பேரன் இருக்கிறார். நான் எதற்காக திமுகவிலிருந்து வந்தேன் என்று ஸ்டாலினுக்கு தற்போது படிப்படியாக புரியும் என்றார்.
இதையும் படிங்க:விழுப்புரம் அருகே உதயநிதி ஸ்டாலின் உருவ பொம்மை எரிப்பு