தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைற்றுவருகிறது. மேலும் தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலில் உள்ளன. அதன்படி உரிய ஆவணம் இன்றி ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்ல தடையுள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஜாபர் என்பவர் ரூ.3 லட்சமும், அதே மாநிலம் சொரனூரைச் சேர்ந்த மொய்து என்பவர் ரூ.1.20 லட்சமும் ரொக்கமாக எடுத்துக்கொண்டு மணப்பாறையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தொடங்கும் மாட்டுச்சந்தையில் மாடுகள் வாங்கக் காரில் சென்றுள்ளனர்.
அப்போது வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் அவர்களிடமிருந்து உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூபாய் 4.2 ரெண்டு லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து இச்சம்பவம் இப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. சந்தைக்கு மாடுகளைக் கொண்டு வந்திருந்த விவசாயிகளும், மாடுகளை வாங்க வந்திருந்த வியாபாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
சந்தையில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த மாடுகளை வாங்க வியாபாரிகள் யாரும் இல்லாததால் மறுபடியும் அவர்கள் மாடுகளை எடுத்துச் செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:
வாகன சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள் கட்சி சார்ந்த வாகனங்களை சோதனை செய்யாமல் விட்டுவிடுகின்றனர். வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் அன்றாட செலவுக்காக பணத்தை எடுத்துக்கொண்டு செல்பவர்களிடம் மட்டுமே சோதனை செய்து பணத்தைப் பறிமுதல் செய்து கொள்கின்றனர் என வேதனை தெரிவித்தார்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தங்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என விவசாயிகளும் வியாபாரிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.