திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பார்வை குறைபாடுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் ஆலோசகர் தாமஸ் தலைமைவகித்தார்.
மேலும், ஏராளமான பார்வை குறைபாடுடையோர் கலந்துகொண்ட இப்போராட்டத்தில்,
- தமிழ்நாடு அரசு சார்பில் பார்வை குறைபாடுடையோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை மூன்றாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்,
- மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் சிறுதொழில் நடத்திட வேலைவாய்ப்பற்ற பார்வை குறைபாடுடையோருக்கு பெட்டிக்கடை வைக்க அனுமதிக்க வேண்டும்,
- லாட்டரி சீட்டு விற்பனையை மீண்டும் தமிழ்நாடு அரசு தொடங்க வேண்டும்,
- நலிந்த இசைக் கலைஞர்களுக்கு வழங்குவது போல வேலைவாய்ப்பற்ற பார்வை குறைபாடுடைய இசைக் கலைஞர்களுக்கு வயதுவரம்பின்றி மாதாந்திர சிறப்பு உதவித்தொகை வழங்க வேண்டும்,
- பார்வை குறைபாடுடைய பட்டதாரிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் விதிமுறைகளை தளர்த்தி வேலைவாய்ப்பு அளித்திட வேண்டும்,
- அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளை மீண்டும் இணைத்திட வேண்டும்,
- இலவச பேருந்துப் பயணம், 25 விழுக்காடு கட்டணச் சலுகை திட்டத்தை செயல்படுத்த மறுக்கும் அரசுப் பேருந்து நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க : சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கிய அரசு மருத்துவர்கள்