திருச்சி: புத்தூர் நான்கு ரோட்டில் இன்று (டிச.1) காலை பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சியில் புதிதாக உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் மதுபான கேளிக்கை நடனத்திற்கு அனுமதி கொடுத்ததாக கூறப்பட்டது.
இதனால் இதற்கு அனுமதி கொடுத்த தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும், ஆபாசமாக பேசி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை ஆபாசமாக பேசியதாக பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 26வது திமுக வட்டச் செயலாளர் பவுல்ராஜ் தலைமையில் திமுகவினர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பாஜக நிர்வாகிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரசு மருத்துவமனை எதிரில் திமுகவினர் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை துணை ஆணையர் அன்பு தலைமையிலான காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து, திமுகவினர் சாலை மறியலை கைவிட்டனர்.
இதையும் படிங்க: எம்ஜிஆரின் நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர்!