2023 Trichy Suriyur Jallikattu: திருச்சி: திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் (Trichy Suriyur Jallikattu 2023) 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த பூபாலன் என்பவர் பரிசாக அறிவித்த இருசக்கர வாகனத்தை தட்டிச் சென்றார்.
திருச்சி மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது திருவெறும்பூர் அடுத்த பெரிய சூரியூரில் இன்று (ஜன.16) நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து போட்டியை ஆரம்பித்தார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மாவட்டம் தவிர தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 610 காளைகளும், 314 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். இன்று காலை 8 மணியளவில் ஆரம்பித்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. ஏழு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் இறுதியில், 17 காளைகளை அடக்கிய பெரிய சூரியூரைச் சேர்ந்த பூபாலன் என்பவர் முதல் பரிசை வென்றார். அவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
14 மாடுகளைப் பிடித்த நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞருக்கு இரண்டாவது பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவருக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இருசக்கர வாகனத்தின் சாவியை வழங்கினார். இது தவிர, அவ்வப்போது மாடுகளை அடக்கும் வீரர்களுக்கும், திறமையாக விளையாடிய மாட்டிற்கும் வெள்ளி காசு, தங்க மோதிரம், சைக்கிள் உள்ளிட்டப் பல்வேறு பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 62 பேர் காயமடைந்தனர். அதில், 11 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தப் போட்டிக்காக திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் 300 மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் வந்து கண்டு ரசித்தனர்.
இதில், பார்வையாளராக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் கண்ணகோனன்பட்டியைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த்(25) என்பவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, முன்னதாக மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் (Madurai Palamedu Jallikattu) காளை தாக்கியதில் அரவிந்த் ராஜ் (24) என்பவரும் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, இந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்ததோடு, தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி (MK Stalin Announced a Relief of Rs 3 lakh) அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Jallikattu: சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை மோதியதில் பார்வையாளர் பலி!