அமமுகவின் மாநில பொருளாளரும், தமிழ்நாடு அரசின் முன்னாள் கொறடாவுமாகிய மனோகரனின் தாயார் ராமலெட்சுமி அம்மாள் நேற்று முன்தினம் (பிப்.15) உடல் நலக்குறைவால் திருச்சியில் காலமானார். இதையடுத்து திருச்சியில் உள்ள மனோகரனின் இல்லத்தில் அவர் தாயாரின் உருவப்படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன் கூறுகையில், "அதிமுகவை மீட்டெடுப்பதுதான் எங்களின் பிரதான நோக்கம். திமுகவே தப்பி தவறி ஆட்சி அமைத்தால் கூட நாங்கள் கொள்கையோடு இருப்போம். ஆனால் முதலமைச்சர் அவரோடு இருப்பவர்கள் இருக்கும் இடம் வேறொரு இடமாக இருக்கும். அதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள்.
டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு தமிழ்நாடு அரசு வெற்றி நடை போடவில்லை. இது தள்ளாடும் அரசாக தான் உள்ளது. மக்கள் நல திட்டங்கள் மக்களுக்கு சேரவில்லை. அதனால் தான் விளம்பரம் செய்கிறார்கள். இடுப்பு ஒடிந்த இஞ்சி தின்ன அரசாங்கம் தான் இந்த அரசாங்கம்.
பரதன் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஓ.பன்னீர்செல்வம் ராவணனிடம் சென்று சேர்ந்து விட்டார். அப்படி சேராமல் இருந்திருந்தால் பிப்ரவரியில் மீண்டும் பரதனாகி இருக்கலாம்.
மத்திய பட்ஜெட்டில் கொஞ்சம் நன்மைகளும், நிறைய தீமைகள் உள்ளன. அதேபோல அதிமுக அரசும் தப்பித்தவறி ஒரு சில நன்மைகளை செய்திருக்கலாம். அது ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட திட்டங்களாக, 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டவைகளாக இருக்கும்.
ஸ்லீப்பர் செல் என்பவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ மட்டுமல்ல. அதிமுகவின் உண்மை தொண்டர்கள்தான் ஸ்லீப்பர் செல்கள். உதாரணமாக சசிகலாவை காரில் அழைத்து வந்த சம்மங்கி, தட்ஷணாமூர்த்தி உள்ளிட்டவர்கள் ஸ்லீப்பர் செல்கள்" என்றார்.