திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, “தமிழ்நாட்டிற்கான தண்ணீரை கர்நாடகா, கேரளா, ஆந்திரா அரசுகள் தர மறுக்கும் நிலையில் தமிழ்நாட்டில் இருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் இருந்து மணல் கேரளா, கர்நாடகத்திற்கு கொண்டு செல்லப்படுவது நியாயமல்ல. நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்க ஆறுகளில் இருந்து லாரிகளில் மணல் அள்ளுவதைத் தடைசெய்ய வேண்டும்.
விவசாய விளைபொருளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். அதேநேரம் விளைபொருள்களை கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்பதை, தமிழ்நாடு அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணம் கொடுத்தால் மட்டுமே விவசாயிகளுக்கான பட்டா, நில அளவை போன்றவை நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு விவசாயிகள் மீது கருணை கொண்டு தவறு செய்யும் அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தனி நபர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதனையடுத்து, அலுவலகம் வந்த ஆட்சியர் சிவராசுவை முற்றுகையிட்ட விவசாயிகள், கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதையும் படிங்க: காவல் துறையினர் பொய் வழக்குப் போடுகின்றனர் - தமிழ்நாடு கள் இயக்கம்