திருச்சி: கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடைபெறாத நிலையில் கரோனா தாக்கம் குறைந்து தற்போது கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தற்போது தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12ஆம் வகுப்பு தேர்வு மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11ஆம் வகுப்பு தேர்வு மே 9ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல 10ஆம் வகுப்பு தேர்வு 6ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
கரோனா காரணமாக பள்ளிகள் சரிவர செயல்பட முடியாத நிலையில் பாடங்கள் குறைக்கப்பட்டு தேர்வு நடைபெறுமென தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது.
நாளை (ஏப். 04) கணிதத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில் கணித தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங்களில் கசிந்தது. இது பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரை இதுபோன்று வினாத்தாள்கள் வெளியாகும்போது பிளான் ஏ (plan A) அல்லது பிளான் பி (plan B) மூலம் முடிவுகள் எடுக்கப்படும்.
அந்த வகையில் பிளான் பி மூலம் நாளை (ஏப் 04) கட்டாயமாக திருப்புதல் தேர்வு நடைபெறும்” என்றார்.
இதையும் படிங்க: ஜனநாயகத்தை தொலைத்தவர் இந்திரா காந்தி- நரேந்திர சிங் தோமர்!