அமெரிக்க மனிதநேய சங்கத்தின் மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கு வழங்கப்பட்டது. அதற்கான பாராட்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. விழாவில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
விழாவிற்கு தலைமை வகித்த திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு பேசுகையில், ' திராவிடர் கழகத்தை வீரமணி சிறப்பாக நடத்திவருகிறார். பெரியாரின் சொத்துக்களை வீரமணியிடம் ஒப்படைத்ததுதான் சரியான முடிவு என்று கருணாநிதியே கூறியிருக்கிறார். இதுதான் வீரமணிக்கு கிடைத்த மிகப்பெரிய நோபல் பரிசாகும்.
திமுக தலைவர் ஸ்டாலினை அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று கூறிய முதலமைச்சருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் என்று அமைச்சர் சீனிவாசன் கூறுகிறார். அதேபோல் ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதாவை பாராட்டுகிறாரா? திட்டுகிறாரா? எனபதுகூட தெரியவில்லை, அந்த அளவுக்கு மோசமாக பேசுகிறார். அமைச்சர் ஜெயக்குமாரிடம் வேலை கேட்டுச் சென்றால் பிள்ளையை கொடுக்கிறார். இருப்பினும் ஸ்டாலின் குறித்து அதிமுகவினர் விமர்சனம் செய்யும்போது கூட்டணி கட்சியினர் அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.
மேலும் இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்ததால் அடுத்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்று அதிமுகவினர் அவர்களது கட்சியினரை உசுப்பேற்றுகின்றனர். ஆனால் கூட்டணிக் கட்சியினரின் ஆதரவோடும், மக்கள் ஆதரவோடும் கண்டிப்பாக திமுக ஆட்சி அமையும் என உறுதிப்படத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'உள்ளாட்சித் தேர்தலை நடக்கவிடாமல் செய்ய ஸ்டாலின் சதி' - அமைச்சர் கே.சி.வீரமணி !