தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு கோர தாண்டவமாடி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று (ஜூலை 23) மட்டும் கரோனா பாதிப்பு ஆறாயிரத்தை தாண்டியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதேபோன்று பிற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், திருச்சி மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மஸ்தான் தெருவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர், கடந்த சில வருடங்களாகவே சர்க்கரை நோய் மற்றும் பல்வேறு வகையான உடல்நிலை கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 22) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து, முதியவர் வசித்து வந்த தெருவை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து நகராட்சி பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மணப்பாறை பகுதியில் இதுவரை 170 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் தற்போது 59 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையும் படிங்க: ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர ஆணையம்: அரசு உத்தரவு