திருச்சி சிறுகனூர் அருகே அழுதலையூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் ரெங்கராஜ்(48), பெருமாள்(45). இவர்கள் தங்களுக்குச் சொந்தமான 210 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். பின்பு அந்த ஆடுகள் அனைத்தையும் திறந்தவெளியில் தற்காலிக பட்டி அமைத்து, அதில் அடைத்துள்ளனர்.
அதன்பிறகு இருவரும் சாப்பிடுவதற்காகச் சென்றுள்ளனர். அவர்கள் சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபொழுது ’வடிவேலுவின் கிணற்றை காணோம்’ எனும் காமெடி போல், 210 ஆடுகள் இருந்த தடயமே இல்லை. ஆடுகள் மற்றும் அவை அடைக்க அமைக்கப்பட்டிருந்த பட்டி என அனைத்தையும் திருடர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து சிறுகனூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்; பல இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை எனவும் தெரிகிறது. இதனால் ரெங்கராஜ் பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். சிறுகனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்டப் பகுதிகளில் தொடர் திருட்டு நடந்து வருகிறது.
திருட்டு குறித்து சிறுகனூர் காவல் துறையினர் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஆண்டு மாத்தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இதேபோன்ற சம்பவத்தில் காவல் துறையைச்சார்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். அதுமுதலே காவல் துறையினர் ஆட்டுத்திருட்டு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆட்டோவில் கடத்தி சென்று இளைஞர் எரித்து கொலை: காவலர் உட்பட 5 பேருக்கு வலை