தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், வடபாகம் காவல் ஆய்வாளர் அருள் தலைமையில், உதவி ஆய்வாளர் ரவிக்குமார் உட்பட மற்ற காவல்துறையினர் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள தனியார் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து காவல்துறையினர் சோதனை செய்ததில், நெகிழி சாக்கு பையில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்தி வந்த நபர் தூத்துக்குடி ஐயப்பன் நகரைச் சேர்ந்த விசுவநாதன் (48) என்பது தெரியவந்தது.
அதையடுத்து காவல்துறையினர் விஸ்வநாதனை கைது செய்து, அவரிடம் இருந்த 2.400 கிலோ கிராம் கஞ்சாவையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், லாரியில் லோடு ஏற்றுவதற்காக ஒடிசா மாநிலம் சென்றபோது அங்குள்ள கஞ்சா வியாபாரிகளிடமிருந்து விசுவநாதன் கஞ்சாவை வாங்கி வந்து, தூத்துக்குடியில் சில்லறை விற்பனைக்காக சரவணன் என்பவரிடம் கொடுத்து வந்ததாக தெரியவந்தது.
இதற்கிடையில், தூத்துக்குடியில் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்யும் சரவணன் தலைமறைவானதை அடுத்து, அவரை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைக்கப்பட்டார்.