நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு-கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள பெரும்பாலான மக்கள் அண்டை மாநிலங்களில் பணியாற்றிவருகின்றனர். அதேபோல் மாணவர்களும், வெளியூர்களிலுள்ள கல்லூரிகளில் பயின்றுவருகின்றனர்.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரூ ஆகிய பகுதிகளில் கல்வி மற்றும் வேலைக்காகச் சென்ற இளம்பெண்கள் கடந்த நான்கு மாதங்களாகச் சொந்த ஊர் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மாவடத்துக்குள் வர மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை இ-பாஸ் கோரி விண்ணப்பித்தும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதால் அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்களின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் பேசியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கூடலூர் நந்தட்டி பகுதியில் வசிக்கும் சைனி என்பவரது மகள் கரோனா ஊரடங்கால் பெங்களூரிலிருந்து திரும்ப முடியாத நிலையில், ஊரடங்கு காலத்தில் அவருடன் பயிலும் மற்றொரு மாணவியுடன் கர்நாடகாவிலிருந்து இ-பாஸ் பெற்று கர்நாடக எல்லையைக் கடந்துவந்த போது கக்கநல்லா சோதனைச்சாவடியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
எப்படியாவது தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி வழங்க அவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்று இருப்பவர்கள், நீலகிரி மாவடத்திற்குள் வர இ-பாஸ் அனுமதி கிடைக்காததால் மாதக்கணக்கில் தவித்துவருகின்றனர்.
அதனால் நீலகிரி மாவட்ட நிர்வாகம் இ-பாஸ் வழங்குவதில் கடைப்பிடிக்கும் கெடுபிடிகளை நீக்கி, முறையாக ஆய்வுசெய்து சரியான நபர்களுக்கு இ-பாஸ் வழங்கி, அவர்கள் சொந்த வீடுகளுக்கு வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.