மதுரை: மதுரையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவனின் மரணம் தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். ரமேஷின் அண்ணனான இதயக்கனி என்பவர் அதே பகுதியிலுள்ள உறவினர் வகை பெண்ணான புனிதா என்பவரை காதலித்து வந்ததாக அறியமுடிகிறது.
இந்நிலையில், ரமேஷின் அண்ணன் இதயக்கனி தனது காதலி புனிதாவுடன் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, புனிதாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சாப்டூர் காவல் நிலைய அலுவலர்கள் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தாரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து அனுப்பி வைத்தனர்.
கடந்த 16ஆம் தேதி, சாப்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்கண்ணனின் விசாரணைக்கு சென்ற ரமேஷ், மறுநாள் அதே பகுதியில் தூக்கு மாட்டி உயிரிழந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். விசாரணைக்கு அழைத்து சென்று ரமேஷை காவல்துறையினர் அடித்து கொலை செய்துவிட்டதாக கிராம மக்கள் கூறிவருகின்றனர்.
மர்மமான முறையில் உயிரிழந்த ரமேஷின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் ஜெயக்கண்ணன் உள்ளிட்ட 4 காவல்துறையினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துரை. ஜெயச்சந்திரன், சம்பவம் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.