கோயம்புத்தூர் மாவட்டம் கோவில்பாளையம் அடுத்த கோட்டைப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கௌரிசங்கர். இவர் அப்பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு (அக்.18) பணிகளை முடித்துவிட்டு தனது காரை பெட்ரோல் பங்கில் நிறுத்திவிட்டு அருகில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று (அக்.19) அதிகாலை பெட்ரோல் பங்கிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் பங்கிலிருந்த அலுவலக அறையை உடைத்து, காரின் சாவியை எடுத்துள்ளனர்.
பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா காரை திருடிச் சென்றனர். காலையில் பெட்ரோல் பங்கிற்கு வந்த கௌரிசங்கர் கார் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பாளையம் காவல் துறையினர், பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சியை ஆய்வு செய்தனர்.
அதில், மினி ஆட்டோவில் வந்த இரண்டு பேர் பெட்ரோல் பங்கிலுள்ள அலுவலக அறையை கள்ளச்சாவி கொண்டு திறந்து, காரின் சாவியை எடுத்துக்கொண்டு காரை ஓட்டிச் செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து இந்த காட்சிகளை கொண்டு காவல் துறையினர் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.