கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் குலசேகரம் அரசு மருத்துவமனையில் உள்ள 108 அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) செவிலியராக பணியாற்றி வருகிறார். ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவருக்கும், செவிலியருக்கும் இடையே பழக்கம் இருந்துவந்ததாக தெரிகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இந்த தொடர்பு வெளியே தெரியவர அந்த செவிலியர் அங்கிருந்து குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு பணியிடம் மாற்றப்பட்டார். இந்நிலையில், இரவு நேரங்களில் இளைஞர் ஒருவர், குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு வந்து செவிலியரை சந்தித்து செல்வதை அந்த பகுதி இளைஞர்கள் கண்காணித்து வந்துள்ளனர்.
இதனிடையே, நேற்றிரவு (நவம்பர் 2) குலசேகரம் மருத்துவமனைக்கு வந்த அந்த இளைஞர், தன் காதலியான செவிலியரை மருத்துவமனையில் காலியாக இருந்த நோயாளிகள் அறையில் தனிமையில் சந்தித்தார். இதை கவனித்த அப்பகுதி இளைஞர்கள், நோயாளிகள் அறையின் கதவை வெளியே பூட்டிவிட்டு மருத்துவமனை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
மருத்துவமனை ஊழியர்கள் வந்து விசாரித்தபோது செவிலியர் எதுவும் நடக்காதது போல நடித்துள்ளார். சந்தேகமடைந்த மருத்துவ ஊழியர்கள், நோயாளிகள் அறையின் கழிவறை (பாத்ரூம்) கதவை திறந்து பார்த்தபோது அங்கே இளைஞர் ஒருவர் இருந்ததை கண்டனர்.
இதைத்தொடர்ந்து, தங்களது தவறை உணர்ந்த செவிலியரும் இளைஞரும் பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள், தகவலறிந்து வந்த காவல்துறையிடம் மன்னிப்பு கோரினர். இதனால், அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.