தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் மீது பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு மீடூ (MeToo) புகார் எழுந்தது.
இதன் காரணமாக சங்கத்திற்குள் பிரச்னை எழுந்த நிலையில் துணைத் தலைவராக இருந்த என். ஹரிஹரமுத்து உள்ளிட்ட சிலர் அவர் தலைவராக நீடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தில் அதிருப்தியில் இருந்த என். ஹரிஹரமுத்துவும், அவரது ஆதரவாளர்களும் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் போட்டிப் பொதுக்குழு நடத்தியதாகத் தெரிகிறது.
பெரும்பான்மை பலத்தைக் கொண்ட அவர்கள் தலைவராக இருந்த நாராயணன் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, அதனை அந்தச் சங்கம் கணக்கு வைத்துள்ள இந்தியன் வங்கியின் சென்னை அபிராமபுரம் கிளை மேலாளருக்கு அனுப்பிவைத்தனர்.
துணைத் தலைவராக இருந்த ஹரிஹரமுத்துவின் கடிதத்தின் அடிப்படையில் வங்கிக் கணக்கை நாராயணன் கையாளாத வகையில் கணக்கை முடக்கிவைக்க கிளை மேலாளர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக இந்தியன் வங்கிக்கு எதிராக மான நஷ்ட வழக்கை நாராயணன் தொடர்ந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நாராயணன் தாக்கல்செய்திருந்த மனுவில், "தமிழ்நாடு பிராமணர் சங்க வங்கி நடவடிக்கைகளின் தான் ஈடுபடுவதைத் தடுக்கக்கூடாது. அதேபோல, வேறு வங்கிக்கு பண மாற்றம் செய்யவும் இடையூறு செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது பிராமணர் சங்கம் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் ஜி. நன்மாறன், "ஹரிஹரமுத்து கூட்டிய சட்டவிரோதமான கூட்டத்தில்தான் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, அச்சகத்தின் தலைவர் நாராயணன் நீக்கப்பட்டது செல்லாது. அதன் அடிப்படையில் வங்கி எடுத்த நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தார்.
ஹரிஹரமுத்துவின் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர், "இதேபோன்று பிற உறுப்பினர்கள் மீது புகார்கள் எழுந்த பொழுது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதுபோலவே தலைவர் நாராயணன் மீதான புகாரிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டார்" எனத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "ஹரிஹரமுத்து நடத்திய கூட்டம் சங்க விதிகளுக்கு உட்பட்டு இல்லை என்பதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாதது.
அதனடிப்படையில், நாராயணன் நீக்கம் குறித்து இந்தியன் வங்கி அபிராமபுரம் கிளைக்கு எழுதிய கடிதமும் செல்லாது.
எனவே, வங்கி கணக்குகளைக் கையாளக் கூடாது என இந்தியன் வங்கி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடைவிதித்து, நாராயணன் தொடர்ந்துள்ள பிரதான வழக்கு முடியும் வரை இந்த இடைக்காலத் தடை அமலில் இருக்கும்" எனக் குறிப்பிட்டார்.