ராமநாதபுரத்தில் இயங்கி வந்த போலி நிதி நிறுவனத்தில் மூன்று கோடி ரூபாய் இழந்த துளசி மணிகண்டன் என்பவர் பஜார் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர், அந்த நிதி நிறுவனம் ரூ. 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததை கண்டறிந்தனர். அந்த மோசடியை நடத்திவந்த நீதிமணி, மேனகா, ஆனந்த் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த பண மோசடியில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, ஜூலை 24ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு ராமநாதபுரம் பஜார் காவல் நிலையம் அழைப்பாணை அனுப்பியது.
இதனிடையே, சம்மனுக்கு ஆஜராவதிலிருந்து விலக்குக் கேட்டு உயர் நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 7ஆம் தேதி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஞானவேல்ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் 7, 8 ஆகிய இரு நாள்கள் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஆஜரான அவரிடம் 66 கேள்விகள் கேட்கப்பட்டதாக அறிய முடிகிறது. அதன் பிறகான விசாரணைக்கு அவர் காவல்நிலையம் வரவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பில் முன் பிணைக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பாக இன்று (ஆகஸ்ட் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. அவருக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்" என கோரினார்.
அரசு தரப்பில், அவர் ஆகஸ்ட் 10, 12 ஆகிய இரண்டு தேதிகளில் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை என கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, எந்த காரணத்திற்காக பணம் வழங்கப்பட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் தர உத்தரவிட்டு, அதுவரை அவரை கைது செய்யக் கூடாது எனக்கூறி வழக்கை ஆகஸ்ட் 27ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.