செப்டம்பர் 13ஆம் தேதி அதாவது நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வின் மீது கொண்ட அச்சம் காரணமாக மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, இன்று காலை தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.
அவரது இறப்பிற்கு துணை முதலமைச்சர் உள்பட பல அரசியல் தலைவர்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா இன்று காலை தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
அமைச்சர் வேலுமணியின் ட்வீட்டில், “மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா இன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்துவாடும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்" எனப் பதிவிட்டுள்ளார்.
அவரது மற்றொரு பதிவில், "மாணவச் செல்வங்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளைக் கண்டு துவளாமல், அவற்றைத் தன்னம்பிக்கையோடும், துணிவோடும் எதிர்கொள்ளும் உறுதியை மனத்தில் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “நீட் தேர்வு அச்சம் இன்னோர் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நெஞ்சம் விம்முகிறது. இன்னும் எத்தனை நாள்களுக்கு இந்தத் துயரம் தொடரும்?” எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதேபோன்று அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.