தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 'கனெக்ட் 2020' என்னும் பெயரில் இணையவழி மாநாடு நடைபெற்றுவருகிறது. மாநாட்டின் இறுதிநாளான இன்று சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.
தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020 (Tamil Nadu Cyber Security Policy 2020), தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை 2020 (Tamil Nadu Blockchain Policy 2020), தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை செயற்கை நுண்ணறிவுக் கொள்கை 2020 (Tamil Nadu Safe and Ethical Artificial Intelligence Policy 2020) ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள குறிப்பில், "இணையவழி ஊடுருவல், தாக்குதல்களிலிருந்து திறம்படப் பாதுகாத்திட, மாநிலத்திற்கான இணையப் பாதுகாப்புக் கொள்கையை வரையறுப்பது இன்றியமையாததாகிறது.
அதன்படி, தகவல் தொழில்நுட்பவியல் துறையால் உருவாக்கப்பட்ட 'தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020' தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டார்.
இணையத் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு அரசுத் துறைகள் பயன்படுத்திடும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையால் உருவாக்கப்பட்ட 'தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை 2020' இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், அரசின் மின்னாளுமைக்காக நம்பிக்கை இணையக் கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கிடும். தற்சமயம், செயற்கை நுண்ணறிவுப் (Artificial Intelligence) பயன்பாடுகள் உலகளவில் மருத்துவ நோயறிதல், மருந்துப்பொருள் கண்டுபிடிப்புகள், சட்ட அமலாக்கம், ராணுவம், விண்வெளி, கல்வி, ஆளுமை, முதியோர் பராமரிப்பு போன்ற பல துறைகளில் மனித வாழ்க்கையோடு இணைந்து இயங்குகின்றது.
இத்தொழில்நுட்பத்தினை தமிழ்நாடு அரசுத் துறைகள் மக்களுக்கான இணையவழி சேவைகளை வழங்குவதில் பயன்படுத்திக் கொள்வதற்கான யுக்திகளை வழங்குவதற்காகத் தகவல் தொழில்நுட்பவியல் துறையால் உருவாக்கப்பட்ட 'தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை செயற்கை நுண்ணறிவுக் கொள்கை 2020' உருவாக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த தொழில்முனைவோருக்கான விருதுகள் கே.எல்.என். சாய் பிரசாந்த், ஆர். சீனிவாசன், தகிரீஷ் மாத்ருபூதம், விஜய் சங்கர் ராஜா உள்ளிட்ட தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலர் க. சண்முகம், தகவல் தொழில்நுட்பவியல் துறையை கவனிக்கும் கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா, தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குநர் எம். விஜயகுமார், மின்னாளுமை ஆணையர் மற்றும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் தலைமைச் செயல் அலுவலர் சந்தோஷ் கே. மிஸ்ரா, சி-டாக் நிறுவன இயக்குநர் கமாண்டர் எல்.ஆர். பிரகாஷ், சி.ஐ.ஐ. - தமிழ்நாடு பிரிவின் தலைவர் ஹரி தியாகராஜன், சி.ஐ.ஐ. - கனெக்ட் 2020 தலைவர் சுரேஷ் ராமன், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.