திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ராக்கியாபட்டியில் உள்ள சுடுகாடு பகுதியில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி முகம் சிதைக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு, திரூப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முதற்கட்டத்தில், உயிரிழந்த பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து 3 தனிப்படை அமைத்து, சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு பெண்ணை இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வைத்து அழைத்துச் செல்வது தெரிய வந்துள்ளது. பின், அந்த இருசக்கர வாகனத்தை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் தொடர்ந்ததில், திருப்பூரில் உள்ள லாட்ஜ் ஒன்றிலிருந்து அவர்கள் புறப்பட்டது தெரிய வந்துள்ளது.
சிசிடிவி காட்சி மூலம் கொலை செய்யப்பட்ட பெண், இளைஞர்கள் உடன் செல்பவர்தான் என்பதும் போலீசாரால் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் லாட்ஜில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, மூன்று பேரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சீத்தல் ரகஷி (33) என்பதும், ஒரு இளைஞர் பிகாரைச் சேர்ந்த வினய்குமார் (32) என்பதும் தெரிய வந்துள்ளது. வாரந்தோறும் இருவரும் திருப்பூரில் உள்ள லாட்ஜிற்கு வந்து சென்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மூன்றாவது இளைஞர் குறித்து தகவல் தெரியாத நிலையில், அவர்கள் லாட்ஜில் கொடுத்த தொடர்பு எண்ணைக் கொண்டு மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் தங்கி, பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வினய்குமாரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் வினய்குமாரிடம் மேற்கொண்ட விசாரணையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சீத்தல் ரகஷியின் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார். சீத்தல் ரகஷி பனியன் நிறுவனத்தில் பணியாற்றும்போது பெருமாநல்லூரில் வசித்து வந்த வினய்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இருவரும் இரண்டு ஆண்டுகளாகப் பழகி வந்த நிலையில், அவ்வப்போது லாட்ஜில் அறை எடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று லாட்ஜில் அறை எடுத்து இருவரும் தங்கி இருந்த நிலையில், வினய்குமாருக்கு அவரது வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்ப்பதை அறிந்த சீத்தல் ரகஷி, மீண்டும் தனது வீட்டிற்கு செல்ல மாட்டேன் தன்னை திருமணம் செய்துகொள் என தகராறு செய்துள்ளார்.
அவரை சாமாதனம் செய்ய முடியாத நிலையில், தனது நண்பர்களை அறையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என சொல்லி விட்டு லாட்ஜில் இருந்து வெளியே சென்று பாண்டியன் நகரில் தங்கி, பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் விகாஷ்குமாரை அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.
பின், மூவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் லாட்ஜில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஆனால் வினய்குமார் தனது அறைக்கு அழைத்துச் செல்லாமல், நீண்ட நேரமாக சுற்றித் திரிந்ததால் சந்தேகம் அடைந்த சீத்தல் ரகஷி, பெருமாநல்லூர் ராக்கியாபட்டி சுடுகாடு அருகே தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த வினய்குமார், சீத்தல் ரகஷியின் முகத்தில் குத்தி உள்ளார். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த சீத்தலின் துப்பட்டாவைக் கொண்டு கழுத்தை நெரித்துள்ளார். பின், கீழே இருந்த கல்லை எடுத்து சீத்தல் ரகஷியின் தலையில் வீசி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் இருவரும் வழக்கம் போல பணிக்கு சென்றதாக தெரிவித்துள்ளார். மேற்கொண்ட விசாரணை அடிப்படையில், பாண்டியன் நகரில் இருந்த விகாஷ்குமாரையும் கைது செய்த போலீசார் இரண்டு பேரையும் அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துடன் தற்கொலை! கடன் தொல்லை காரணமா?