திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்டது கணபதிபாளையம் ஊராட்சியில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 50 நாள்களாக அப்பகுதிக்கு குடிநீர் வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடமும், அரசு அலுவலர்களிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இன்று குடிநீர் வந்துவிடும் என அலுவலர்கள் தெரிவித்திருந்தனர், ஆனால் அப்பகுதியில் இன்றும் குடிநீர் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கணபதிபாளையம் பஞ்சாயத்து நிர்வாகத்தைக் கண்டித்து கணபதிபாளையம் திருப்பூர் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அரசு அலுவலர்கள், பல்லடம் காவல்துறை துணை காவல் கணிகாணிப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரிடம் மக்கள் பேசுகையில், "குடிநீர் முறையாக வழங்கவில்லை என்றும், வேலைக்கு செல்லும் பெண்கள் விடுமுறை எடுத்தால்தான் குடிநீர் பிடிக்க முடிகிறது.
அப்படி விடுமுறை எடுத்து வீட்டில் இருக்கும்போது குடிநீர் வழங்குவதில்லை" என்றனர். மேலும் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பதிக்கப்படும் சூழலில் பலமுறை புகார் அளித்தும் குடிநீர் வழங்காதது ஏன்? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் கணபதிபாளையம், திருப்பூர் பிரதான சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு - வீணாகும் பல லட்சம் லிட்டர் நீர்!