திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் திருப்பூர் மாநகரில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து அவர்களது உறவினர்களிடம் சேர்க்கும் நிகழ்வு சிறுபூலுவப்பட்டி உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (ஆக. 21) நடந்தது.
இந்நிகழ்வுக்கு, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வனிதா தலைமை வகித்தார். காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அரவிந்த், காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
காவல்துறையின் அறிவுரை
பெற்றோர்கள் குழந்தைகளை கவனித்து வளர்க்க வேண்டும். இல்லாவிட்டால், இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கும். வீட்டில் திட்டியதற்காக வீட்டை விட்டு வெளியேறுவது, பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவது என இன்றைய காலத்தில் குழந்தைகளின் மனநிலை வேறுவிதமாக மாறியுள்ளது. இதனை பெற்றோர்கள்தான் கவனிக்க வேண்டும் என காவல் துறையினர் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வனிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருப்பூர் மாநகரில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காகவே தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுவரை மொத்தம் 2,371 காணாமல் போனவர்களின் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 2,155 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவர்கள்
மீதம் 216 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு 273 நபர்கள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 246 நபர்களும்; 2020ஆம் ஆண்டு 290 பேர்களில், 269 பேரும்; 2021ஆம் ஆண்டில் தற்போதுவரை 223 நபர்களில், 183 நபர்களும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் மொத்தம் 94 நபர்கள் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில் 71 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், இது அவர்களின் வாழ்க்கையை மாற்றக் கூடிய ஒன்றாக இருக்கும். கடந்த மூன்று மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் காணாமல் போன ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, பெற்றோர்களும், உறவினர்களும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பூரில் குற்றச் சம்பவங்களை விரைவில் தடுக்க ஈ-பீட் செயலி அறிமுகம்