மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திருப்பூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 22 லட்சத்து 8 ஆயிரத்து 921 பேர் உள்ளனர். வேட்புமனு தாக்கல் தொடங்கிய இரண்டு நாட்களில் 3 சுயேச்சை வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தது முதல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.46.52 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, என்றார்.
மாவட்டம் முழுவதும் 376 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவைகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்க இருப்பதாகவும் கூறினார்.