இன்றைய தலைமுறையினர் எதிலும் வேகமாக வளர வேண்டும். எழுந்து வரும்போதே உயர பறக்க வேண்டும் என்ற ஆசை தொற்றி வாழ்கின்றனர். சமீபகாலமாக வயதான பெற்றோர்களை இளம்பிள்ளைகள் கைவிடும் சோக சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. அனைத்துப் பகுதிகளிலும் தொற்று நோயைப் போல், குடும்ப உறவுமுறையை, இத்தகைய செயல்கள் சீரழித்து வருகின்றன.
பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்கள் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையும் நீடிக்கிறது. வேர்களை மறக்கும் விழுதுகளாகவே மாறிவிட்டது வேதனைதான். அந்த வகையில், திருப்பூரில் பெற்ற மகனின் கொடுமை தாங்க முடியாமல், தங்களை கருணைக் கொலை செய்யுங்கள் என்று தள்ளாடும் வயதில் தம்பதினர் வந்து கூறும் காட்சி நெஞ்சை பதறச் செய்கிறது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி கருணையம்மாள். இவர்களுக்கு பழனிசாமி என்ற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களது மகனும், மகளும் சொத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டு, தங்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர். எனவே, தங்களை கருணைக் கொலை செய்ய வலியுறுத்தி சென்னியப்பனும், கருணையம்மாளும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து முதியவர் சென்னியப்பன் கூறுகையில், 'எனது மகன் பழனிசாமி, எங்களது சொத்துக்களை ஏமாற்றி பறித்துக்கொண்டு, கடந்த 10 ஆண்டு காலமாக எங்கள் இருவரையும் கொடுமைப்படுத்தி வருகிறார். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எங்களுக்கு உதவி கிடைக்கவில்லை.
எனது கால் ஒரு கார் விபத்தில் சிக்கி, நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். எங்கள் வீட்டில் மின்சாரத்தை துண்டித்து வைத்துள்ளார். குடிநீர் குடிக்க கூட விடுவதில்லை. நாங்கள் வாழவே வழியில்லாமல் தவித்து வருகிறோம். எனவே, எங்களுக்குரிய நீதி கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் கருணைக் கொலை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதையும் படிங்க: 17வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் ஜெயம் ரவி!