திருப்பூரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் (60) என்பவர் கடந்த 14 ஆண்டுகளாகத் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டு வருகிறார். இதனால் அனைவராலும் 'அவேர்னெஸ் அப்பா" என்று அழைக்கப்படுகின்றார். தொடக்கக் காலங்களில் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த இவருக்கு, திருப்பூரைச் சேர்ந்த சாஸ்தா மோட்டார்ஸ் நிறுவனத்தார், இருசக்கர வாகனம் அளித்து ஊக்கம் அளித்தனர். தற்போது இந்த இரு சக்கர வாகனத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
தலைக்கவசம் அணிவோம்! இருசக்கர வாகனம் இருவருக்கே! இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்யாதீர்! சாலை பாதுகாப்பு சாலைக்கு அல்ல, சாலையில் பயணிக்கு நமக்கே! என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இவர் வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் தனது உடையிலும் இது போன்ற வாசகங்களை அச்சிட்டு அதன் வாயிலாக மக்களிடம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் வரும் ஜூலை 16ஆம் தேதி ‘இறுதிச் சுற்று’ என்ற தலைப்பில் கன்னியாகுமரியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளவுள்ளார். இதற்காக தேனி வழியாக திருப்பூர் வந்தடைந்த சிவசுப்பிரமணி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து ஆதரவு கோரினார். அவரை வாழ்த்திப் பாராட்டிய எஸ்.பி பாஸ்கரன் விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, பேரையூர் வழியாக இன்று ராஜபாளையத்தில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.