மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள மின்சார சட்டத் திருத்த மசோதா - 2020 அமலாகும் பட்சத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரமும், கைத்தறிகளுக்கு 250 யூனிட் மின்சாரமும், விசைத்தறிகளுக்கு 750 மின்சாரமும் ரத்தாகும் மாபெரும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு மின்சாரம் சமூகநீதி பண்டம் என்ற பட்டியலில் இருந்து சந்தை பண்டமாக மாற்றப்பட உள்ளதால், தற்போது உள்ளதைவிட மின்சாரம் மூன்று மடங்கு விலை ஏற்றத்தைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
எனவே சிறு, குறு விவசாயிகளுக்கும் நடுத்தர குடும்பங்களுக்கும் ஏழைகளுக்கும் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். பெட்ரோலியத்துக்கு எப்படி அந்த நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்கிறதோ, அதேபோன்று மின்சாரம் எதிர்காலத்தில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களாலும், வெளியிடும் நிறுவனங்களாலும் தினசரி விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
இந்தச் சட்டம் கடுமையாக அனைத்து மக்களையும் பாதிக்கக் கூடியது என்றும்; எனவே, இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காளிநாதம்பாளையத்தில் இலவச மின்சார உரிமை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் சார்பில் கறுப்புக்கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா - 2020யை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் கறுப்புக்கொடியுடன் முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காளிநாதம்பாளையம், அக்கணம் பாளையம், அய்யம்பாளையம், அல்லாலபுரம், குப்பிச்சிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.