திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து பரப்புரை பொதுக்கூட்டம், திருப்பூர் கரட்டாங்காடு பகுதியில் நடைபெற்றது. முன்னதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்பதற்காக காரில் அப்பகுதிக்கு வந்தார்.
இந்நிலையில், இந்து கடவுளுக்கு எதிராக கி.வீரமணி பேசினார் என அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீரமணி வந்த கார் மீது இந்து முன்னணியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர் . இந்த தாக்குதலில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி இந்து முன்னணியினரை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அதிமுகவிற்கு வாக்களிப்பது இருண்ட இந்தியாவிற்கானது
தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி பேசுகையில், "பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி போன்றவை மத்திய அரசின் சர்வதிகார நடவடிக்கைகள். இதனால் பெருமளவு தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுகவிற்கு வாக்களிக்கக்கூடிய வாக்குகள் பாஜகவுக்கானது, இருண்ட இந்தியாவுக்கானது. அதனால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.
புகைப்பட கலைஞரின் கேமராவை பறிக்க முயன்ற திமுக
பொதுக்கூட்டம் நடைபெற்றிருக்கும்போது கி.வீரமணியின் பாதுகாப்பிற்காக நின்றிருந்த திமுகவினரை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றபோது திமுகவினருக்கும் அவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து திமுகவினரை அமைதிப்படுத்துவதற்காக திமுகவின் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தனது கட்சியினரை அடித்து அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தினார். சொந்த கட்சியினரை தாக்கியதை படம்பிடித்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் கேமராவை செல்வராஜ் பறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது .