திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "பிரதமர் நரேந்திர மோடி ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் இந்தியாவை உயர்த்த இரவு-பகல் பாராமல் உழைத்துவருகிறார்.
உலக அரங்கிலே இந்தியா வல்லரசாக உழைத்துக்கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியின் உழைப்பால் இந்தியா உயர்ந்து நிற்கின்றது. தமிழ்நாட்டுத் தேவையான திட்டங்களைக் கேட்கும் போதெல்லாம் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாடு உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக விளங்க உதவிய மோடி தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள், சீர்மிகு நகரம் திட்டத்தின் மூலம் வளர்ச்சியடைந்துவருகின்றன.
மாநிலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுவருவதால் தொழில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முன்வருகின்றனர். ஈரோடு மக்களின் பெரும் கனவுத் திட்டமான அத்திக் கடவு-அவினாசி திட்டத்தையும் ஜெயலலிதாவின் அரசு நிறைவேற்றியுள்ளது. காவிரி-கோதாவரி திட்டத்துக்குப் பிரதமர் மோடி நிச்சயம் உதவுவார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு 950 கோடி ரூபாயில் சீர்மிகு நகரம் திட்டம் நிறைவேற்றப்பட்டுவருகிறது. திருமண உதவித் திட்டத்தின்கீழ் 12 லட்சத்து 51 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். 52 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலை, சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் கட்டுப்படுத்தினோம். கரோனா காலத்தில் ஏழை மக்களுக்காக விலையில்லா அரசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன" என்றார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சபாநாயகர் தனபால், தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன், கோவை தெற்குத் தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.