திருப்பூர்: நீட் தேர்வினால் தமிழ்நாடு மாணவர்கள் மருத்துவராவதை நாம் இழந்திருப்பதாகவும், தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் நாம் கட்டுகிற வரிப்பணத்தில் வட இந்தியர்கள் படித்து வருவதாகவும், திமுக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கூறியுள்ளார். திருப்பூரில் நடைபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
திருப்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அண்ணா, பெரியாரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து நிகழ்வில் பேசிய அவர், 2021 தேர்தலில் ஆட்சி மாற்றம் நடைபெறப்போவதாகவும், ஸ்டாலின் முதலமைச்சராக ஜார்ஜ் கோட்டையில் அமரப்போவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டிலுள்ள 23 ஆயிரம் கோயில்களை இந்து அறநிலையத்துறை நன்றாக கவனித்துவரும் சூழ்நிலையில், மதத்திற்கு ஆபத்து என ஒரு பிரிவினர் கூறிவருவதாக பாஜகவினரை சாடினார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், போலி விவசாயியான தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் மக்கள் சந்திக்கின்ற இன்னல்களை எல்லாம் கேட்டறிந்து அதனை அறிக்கையாக ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும், 2021ல் முதலமைச்சராக ஸ்டாலின் அமர்ந்ததும் மக்களின் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாரம்பரிய காளைகளை அழிக்க சட்டம் கொண்டுவந்துள்ள அதிமுக: கார்த்திகேய சிவசேனாபதி