திருப்பூர்: பாப்பாங்குளம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக சோளத்தட்டு காட்டுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தையை, வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அவர்களது கண்காணிப்பில் இருந்து சிறுத்தை தப்பியது.
இந்நிலையில் தப்பிய சிறுத்தை திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, அம்மாபாளையம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பதுங்கியிருப்பதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர், அந்த தனியார் நிறுவனத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போட்டு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அவ்விடத்தின் பாதுகாவலர் ராஜேந்திரனை சிறுத்தை தாக்கியது. அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் மூன்று பேரை சிறுத்தை தாக்கியது. அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே குடோனில் பதுங்கியிருந்த சிறுத்தை வெளியேறி அருகில் உள்ள காட்டுக்குள் புகுந்தது.
தற்போது சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிறுத்தை பதுங்கி உள்ள இடத்தை சுற்றிலும் உள்ள பொதுமக்களுக்கு, ஒலிபெருக்கி மூலம், “மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம்” என அறிவுறுத்தி வருகின்றனர்.