திருப்பூர் மாவட்டம் கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராம் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தாராபுரம் நகராட்சி மின் மயானத்தில் சடலங்களை எரியூட்டும் பணியில் ஈடுபட்டுவருகிறார். இவரது மனைவி செல்வி இவருக்குத் துணையாகச் சடலங்களை எரிக்கும் வேலையில் ஈடுபட்டுவந்தார். தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் செல்வி சுயேச்சையாக நின்று முன்னணி வேட்பாளர்களைத் தோற்கடித்து வெற்றிபெற்று கவுண்டச்சிபுதூர் ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவியேற்றார்.
இந்நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்திலுள்ள ஊராட்சிமன்றத் தலைவர் இருக்கையில், செல்வியின் கணவர் ரமேஷ் அமர்ந்து டிக்டாக் செய்து அதனைப் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து ரமேஷை தொடர்புகொண்டு கேட்டபோது, கடந்த 25 நாள்களுக்கு முன்பு ஊராட்சிமன்றத் தலைவர் அறையை சுத்தம் செய்ய தனது உறவினர்களுடன் சென்று இருந்தபோது பணிகள் முடிந்த நிலையில் விளையாட்டாக டிக்டாக் செய்ததாகவும் அதனை தனது டிக்டாக்டில் பதிவேற்றியதாகவும் கூறினார். மேலும் இந்த வீடியோ வைரல் ஆகி விட்டதாகவும் தான் எதார்த்தமாக மட்டுமே வீடியோ செய்ததாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். இனி இதுபோன்ற தவறுகள் நேராது எனவும் அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்; காவல் ஆணையர் தொடங்கிவைப்பு