திருப்பூர் மாநகராட்சி 50மற்றும் 51ஆவது வார்டுக்குட்பட்ட பெரிச்சிரப்பாளையம், திரு.வி.க நகர் செல்லும் வழியில் பொது சுடுகாடு ஒன்று உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மக்கள் இதனை பயன்படுத்தி வந்தனர். சுடுகாட்டினை பாதுகாக்கும் பொதுமக்களின் பங்களிப்புடன் மதில் சுவர் ஒன்றும் கட்டப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜீன் 20ஆம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு மதில் சுவரை இடித்து குப்பைகளை பிரித்து உரக்கிடங்கு அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளின் செயலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தததோடு மட்டும் அல்லாமல் அவர்களை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படாது என அதிகாரிகள் உறுதி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பணிகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் முறையிட்டனர்.
இதனைத்தொடர்ந்து பொதுமக்களிடம் பேசுவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய பொதுமக்களிடம் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர் . அதன்படி அப்பகுதிமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது சுடுகாட்டில் குப்பை உரக்கிடங்கு அமைக்க தாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அதனை மாநகராட்சி செயல்படுத்த முயற்சி மேற்கொண்டால் தொடர் அறப்போராட்டட்தில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.