திருப்பூர் அடுத்த தாராபுரம் அருகே பழைய அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் கீழுள்ளப் பகுதியை மக்கள் மயானமாகப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அமராவதி ஆற்றங்கரையோரம் குப்பைகளும் கொட்டப்படுகின்றன.
இந்நிலையில் ஆற்றுப்பாலத்தின் கீழ் உள்ள பகுதியில் சிலை ஒன்று புதையுண்டுகிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந், தாராபுரம் காவல் துறையினர், வட்டாச்சியர், அலுவலர்கள், அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டபோது சிறிய அளவில் உலோகத்திலான ஐயப்பன் சிலை ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சிலையை கைப்பற்றிய அலுவலர்கள் தாராபுரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் அச்சிலையை ஒப்படைத்தனர். இது பழங்கால சிலையா? எந்த உலோகத்தினால் ஆனாது என்பது பற்றி விசாரித்துவருகின்றனர்.
மேலும், இச்சிலையை சிலை கடத்தும் கும்பல் கடத்திவந்திருக்கலாம் என்றும் கடத்திச் செல்லும்போது வழியில் காவல் துறையினருக்குப் பயந்து சிலையை ஆற்றங்கரையோரம் வீசியிருக்கக்கூடும் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் சிலை திருட்டு தொடர்ச்சியாக நடந்துவருவதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஆற்றின் கரையோரம் உலோகச் சிலை கண்டெடுக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.