திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் தலைமையில் நடைபெற்றது.
இதனையடுத்து செய்தியாளரைச் சந்தித்த முருகன், “தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருகிறது. எனவே பொதுமக்கள் கரோனா முதலாம் அலையை கட்டுப்படுத்தியதுபோல் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு கொடுத்து அரசின் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “நடிகர் விவேக் இறப்பு துக்கத்தை ஏற்படுத்துகிறது. சமூகச் சிந்தனையாளரான நடிகர் விவேக்கின் இழப்பு தமிழ்நாட்டிற்கே பேரிழப்பாகும். ஆனால், விவேக்கின் இறப்பில் திருமாவளவன் அரசியல் செய்துவருகிறார்.
அவரே தடுப்பூசியை இரண்டு முறை போட்டுக்கொண்டுள்ளார். எனவே, பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்” என்றார்.
மேலும், விவேக்கின் மரணம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவிவருவது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த முருகன், “நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுவருகின்றனர்.
நடிகர் விவேக் தடுப்பூசி போட்ட அன்றைய தினம் 800 பேரும் நாட்டின் பிரதமர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். எனவே பொய்ப் பரப்புரைகள் செய்ய வேண்டாம்” என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொடைக்கானலில் தங்கியிருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த முருகன், “எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார்.
கரோனா காலங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்காமல் கொடைக்கானலில் தங்கியிருக்கிறார்” எனக் குற்றஞ்சாட்டினார்.
மேலும் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில் பாதை, தொழில்பேட்டை, மகளிர் கலைக்கல்லூரி அமைக்கப்படும் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: தலைவனாக தகுதியற்றவர் என் கணவர் - பாஜக வேட்பாளரின் மனைவி புகார்!