பெங்களூருவில் இருந்து வேலூர் வழியாக சென்னை, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் வாகனம் மூலம் கடத்த இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு மேற்பார்வையில் தாலுகா காவல் ஆய்வாளர் கருணாகரன், வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் பள்ளிகொண்டா, வேலூர் கொணவட்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த இரண்டு வாகனங்களை சோதனை செய்ததில் அதில் குட்காவை காஞ்சிபுரம், வேலூர், சைதாப்பேட்டைக்கு கடத்துவது தெரியவந்தது.
இதனையடுத்து இரண்டு வாகனங்களில் இருந்து சுமார் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 50 குட்கா பெட்டிகள், இரண்டு வேன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வேன் ஓட்டுனர்கள், வேலூர் சுண்ணாபுகாரை தெருவை சேர்ந்த லத்தீப்கான் (24,) விஜய் தேவாசி, ராஜ்குமார் (33), பன்வர்லால் (26), ரமேஷ்குமார் என்கிற திம்மாராம் (50). ஆகியோரிடம் காவல்துறை விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மோன்திலால் என்பவனை தேடி வருகின்றனர். இதேபோல் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி பெங்களூருவில் இருந்து வேலூருக்கு கடந்த முயன்ற சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான 25 பெட்டி குட்கா பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.