திருப்பத்தூர்: முக்கிய பகுதிகளில் உணவின்றி தவித்து வாழ்ந்துவரும் மக்களுக்கு இணைந்த கைகள் குழு மூலமாக இளைஞர்கள் உணவளித்தனர்.
திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் 50 பேருக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பொறுப்பாளர்கள் ஏதுமின்றி எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் பாணியில் கடந்த வருடம் அக்டோபர் 11ஆம் தேதி இணைந்த கைகள் குழுவை ஆரம்பித்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் சுற்றியுள்ள ஆதரவற்றவர்கள், ஊனமுற்றோர்கள் எனத் தேடித் தேடிச் சென்று தங்களுக்குள் உள்ள சிறிய தொகையை ஒன்று சேர்த்து அந்த தொகைக்கு உள்ளான மதிப்பில் உணவைத் தயார் செய்து தங்களால் முடிந்த அளவிற்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். 50 பேரில் தொடங்கி தற்போது 300 பேராக மாறி இருக்கிறார்கள்.
இந்நிலையில் கைக்கு கிடைக்கின்ற பணத்தை மது, புகை என விரயமாக்கி எதிர் காலத்தை சீரழித்து கொண்டு இருக்கும் இளைஞர்கள் மத்தியில், இதுபோன்ற உதவி மனப்பான்மையோடு செய்து வரும் இணைந்த கைகள் மிகவும் மகத்தானது என்று பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதுவரை இணைந்த கைகள் குழுவை பதிவு கூட செய்யாமல், எந்த விதமான அரசியல் சாயமும் இல்லாமல் சேவை செய்து ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிற இந்த இணைந்த கைகள் குழுவைச் சேர்ந்த இளைஞர்களை திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள மக்கள் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
இதையும் படிங்க: தாத்தா-பாட்டி வெட்டிங் போட்டோஷூட் : அரை நூற்றாண்டு கனவை நிறைவேற்றிய பேரன்!