திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே தமிழ்நாடு - ஆந்திரப் பிரதேச எல்லைப்பகுதியான சித்தூர் மாவட்டம் குப்பம் தாலுகாவிற்கு உட்பட்ட பருத்திகொள்ளி என்ற பகுதியில் வசித்துவருபவர் விவசாயி, முருகன். இவருக்குச் சொந்தமான நிலத்தில் வேர்க்கடலை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் இரவில் நிலத்தில் உறங்கி கொண்டிருந்த முருகன், இவரது மகள் சோனியா(17) ஆகியோர் பயிருக்கு காவலாக இருந்துள்ளனர். அப்போது முருகனின் நிலத்திற்கு வந்த யானையை தந்தை, மகள் இருவரும் சேர்ந்து விரட்ட முயற்சித்துள்ளனர். ஆனால், யானை அவர்களை தாக்க முற்பட்டபோது முருகன் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். ஆனால், அவரது மகள் சோனியா யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆந்திர வனத்துறையினர் உடலை மீட்டு குப்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.