திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சென்னாம்பேட்டை, பங்களா தோப்பு பகுதியை சேர்ந்தவர் மல்லிகா. இவர் அதே பகுதியில் உள்ள தென்னந்தோப்பில், பகல் 1 மணியளவில் கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்க சென்றுள்ளார்.
அப்பொழுது தென்னந்தோப்பில் அதிக அளவில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இந்நிலையில் மல்லிகா என்னவென்று பார்க்கும்போது சிறுத்தை ஒன்று தென்னந்தோப்பு வழியாக ஓடியதை கண்டு பதறிபோய் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் அளித்துள்ளார்.
இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் பழனிச்செல்வம் மற்றும் ஆலங்காயம் மற்றும் வாணியம்பாடி வனத்துறை அலுவலர்கள் சிறுத்தை சென்றதாக கூறப்படும் தென்னந்தோப்பு மற்றும் அதன் அருகில் உள்ள முட்புதர்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், சிறுத்தை நடமாட்டம் குறித்து அறிவதற்காக வனத்துறையினரை ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டனர். ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாணியம்பாடி சிக்கனாங்குப்பம் பகுதியில் சிறுத்தை ஒன்று ஏரிப்பகுதியில் நடமாடி பொதுமக்களை தாக்கியது.
இந்நிலையில் மீண்டும் வாணியம்பாடி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து, வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழப்பு