திருப்பத்தூர்: சென்னையில் சமீபத்தில் வெறி பிடித்த தெரு நாய் கடித்ததில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் அவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டதையடுத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் சமீபத்தில் தெரு நாய்களால் ஏற்படும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அந்த வகையில், வாணியம்பாடி நகராட்சியில் 8 ஆவது நகர்மன்ற உறுப்பினராக இருப்பவர் முகமது நவுமன்.
இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாணியம்பாடி நகராட்சில் கடந்த 10 மாதங்களாக தெரு நாய்கள் கடித்து சிகிச்சை பெற்றவர்களின் விவரங்கள் குறித்து விண்ணபித்து உள்ளார். அதன்படி வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த தகவலின் படி வாணியம்பாடி நகராட்சியில் ஜனவரி மாதம் 131 பேரும், பிப்ரவரி மாதம் 113 பேரும், மார்ச் மாதம் 141 பேரும், ஏப்ரல் மாதம் 114 பேரும், மே மாதம் 118 பேரும், ஜீன் மாதம் 80 பேரும், ஜூலை மாதம் 123 பேரும், ஆகஸ்ட் மாதம் 145 பேரும், செப்டம்பர் மாதம் 196 பேரும், அக்டோபர் மாதம் 68 பேர் என மொத்தமாக 10 மாதங்களில் 1,229 பேரை தெரு நாய் கடிக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தெரு நாய்கள் கடித்து சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பதனால் நாய் கடிக்கு உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்படுவதாக மருத்துவமனை தரப்பில் கூடுதல் விவரங்கள் அளிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: வீடு தேடிச் சென்று கொடுமை...! தூங்கிக் கொண்டு இருந்த பெண்ண நாய் கடித்த கொடூரம்! தலைவலியாகும் நாய்க் கடி விவகாரம்!