திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் உழவர் சந்தை மற்றும் தினசரி காய்கறிக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த உழவர் சந்தையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இங்கு வாணியம்பாடி சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களில் பயிரிட்டு அறுவடை செய்து வரப்படும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த உழவர் சந்தைக்கு இரு பாதை வழித்தடங்கள் உள்ளன. இதன் ஒரு வழித்தடத்தில், வெளி வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகக் கூறி, இன்று (ஜூன் 6) அதிகாலையில் விவசாயிகள் வியாபாரத்தை புறக்கணித்தனர். தொடர்ந்து, உழவர்சந்தை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் உழவர் சந்தை வெளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வருகின்றனர். உழவர் சந்தையில் உள்ள இரு வழிகளிலும் திறந்து வியாபாரம் செய்தால், நாங்களும் வியாபாரம் செய்ய முடியும் என்பதன் பெயரில், இரு வழிகளையும் திறக்கக்கோரி வியாபாரத்தைப் புறக்கணித்து காய்கறி கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, போராட்டம் குறித்து தகவலறிந்த அலுவலர்கள் காவல் துறையினர் உழவர் சந்தை பகுதிக்குச் சென்றனர். அங்கு இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த காலை 10 மணிக்கு வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்நிலையில், இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் வேளாண்துறை அலுவலர், வட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் உழவர் சந்தை விவசாயிகள் மற்றும் காய்கறி கடை வியாபாரிகள் இடையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதுகுறித்து அலுவலர்கள் தரப்பில் கூறும்போது, “உங்கள் பிரச்னை குறித்து மேல் அலுவலர்களிடம் பேசி, அதற்கான முடிவு எட்டும் வரை உழவர் சந்தையில் உள்ள இருபுற வழிகள் திறந்திருக்கும். சாலையோரத்தில் காய்கறி கடைகளை அமைக்கக்கூடாது. இதனை மீறி மோதல் போக்கு மற்றும் போராட்டம் என நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள், தங்களது வழக்கமான பணிக்குச் சென்றனர்.
இதையும் படிங்க: விவசாய வேளாண்பொருள் மீதான செஸ் வரியை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் மறியல் அறிவிப்பு!