வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணிகள், வளர்ச்சிப் பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக. 20) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதலமைச்சர் பழனிசாமி கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசு கரோனா பரவலைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுத்துவருகிறது. அரசு வழிமுறைகளை மூன்று மாவட்டங்களும் சிறப்பாக செயல்பட்டு கடைபிடித்ததன் மூலம் கரோனா கட்டுக்குள் உள்ளது.
இதனால் இறப்பு விழுக்காடு குறைந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 481 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 961 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 46 ஆயிரத்து 914 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் தீக்காயத்திற்கு புதிய அரசு மருத்துவமனை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேலூரில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். சுமாராக ரூ.12.93 கோடி மதிப்பீட்டில் பொன்னை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் இடநெருக்கடி காரணமாக மாற்று இடத்தில் 35 ஏக்கர் மார்கெட் அமைக்க அரசு பரிசீலித்து வருகிறது.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் அடுத்த பத்தலப்பள்ளியில் ரூ.122 கோடியில் அணை கட்டப்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாக உள்ள காவேரிப்பாக்கம் ஏரி ரூ.40 கோடியில் புனரமைக்கப்படும். மகேந்திரவாடி ஏரியும் புரனமைக்கப்படும்.
அதேபோல் வேலூர், சோளிங்கர், குடியாத்தம், ஆற்காடு போன்ற பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்க நில எடுப்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன. விரைவில் புறவழிச்சாலை அமைக்கப்படும். ராணிப்பேட்டையில் மகளிர் விடுதி கட்டுவது குறித்து பரிசீலிக்கப்படும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.18 கோடியில் மகப்பேறு மருத்துவமனை கட்டுப்பட்டு வருகிறது. சமீபமாக அறிவிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவடங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் அமைக்க தேவையான நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. நீண்ட ஆண்டு கோரிக்கையான தென்பெண்ணை - பாலாறு இணைக்க வெப்காஸ்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, ரூ.648 கோடியில் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குரோமியக் கழிவுகளை அகற்ற மாநில அரசிடம் போதிய நிதியில்லாததால் மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. அந்நிதி கிடைத்தவுடன் கழிவுகள் அகற்றப்படும். கரோனாவால் தமிழ்நாட்டில் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மக்களுக்குத் தேவையான திட்டங்களை எவ்வித தொய்வும் இல்லாமல் அரசு செய்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி குறித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது, உயர் நீதிமன்றம் தீர்ப்பின்படி அரசு செயல்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு மத்திய அரசு ஏற்கனவே சில வழிகாட்டு முறைகளை அறிவித்துள்ளது. அதை அரசு நடைமுறைப்படுத்தும்” என்றார்.
பாஜகவினர் சமூக வலைதளங்களில் முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்புகின்றனர் என்ற கேள்விக்கு, ” பாஜக அரசு அறிவித்த திட்டத்தைத்தான் அரசு செயல்படுத்தியுள்ளது. அவர்கள் அறிவித்த அறிவிப்பின்படிதான் அதிமுக (அம்மா) அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க:முதலமைச்சரிடம் ஆசிபெற்ற கடம்பூர் ராஜூ