நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத்தூரை தனி மாவட்டமாக 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த மாவட்டத்தின் ஆட்சியராக சிவனருள், காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மாவட்டம் பிறந்து ஓராண்டு கொண்டாட்டத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி இன்று (நவம்பர் 28) கலந்துகொண்டார். இந்தக் கொண்டாட்டத்தின்போது தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகம் திறப்பு விழா, நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த வீரமணி கூறுகையில், "திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விரைவில் அரசு மருத்துவக் கல்லூரி வர அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு வாணியம்பாடி அடுத்த நெக்னாம்மலை மழைவாழ் மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தது வரலாற்றுச் சாதனை.
குடிநீர் பஞ்சத்தைப் போக்க தமிழ்நாடு அரசு காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்காகத் திருப்பத்தூர் மாவட்டத்திற்கான ஆயிரத்து 212 கோடி ரூபாய் வழங்கியது. திருப்பத்தூர் நகராட்சியில் சுமார் 105 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டம் முடியும் தருவாயில் உள்ளதால் மக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக வரும்.
வாணியம்பாடி பகுதியிலிருந்து ஊத்தங்கரைவரை செல்லும் நெடுஞ்சாலையைச் சீரமைக்க 299 கோடி ரூபாய் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டிலேயே திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்திய அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுக்கும் வாழ்த்துகள்" என்றார்.