திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த சின்னபள்ளி குப்பத்தைச் சேர்ந்தவர் யுகேந்திரன் (26). இவர் ஆம்பூர் ஊர்க்காவல் படைப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஜூன் 14) இரவு யுகேந்திரன் தனது வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து உள்ளார்.
இதனையடுத்து, உடனடியாக இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் யுகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பி உள்ளார். இந்த நிலையில், இந்த நிகழ்வு குறித்து ஊர்க்காவல் படை வீரர் யுகேந்திரன் கூறுகையில், “நான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பணியாற்றி கொண்டிருந்தேன்.
அப்போது அங்கு தன்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த காவல் சிறப்பு பிரிவு துணை காவல் ஆய்வாளர் குமரன் என்பவர், என்னை டீ வாங்கி வரும்படி கூறினார். அதற்கு நான் பணி அதிகமாக உள்ளது என கூறினேன். அதற்கு குமரன் மற்றும் ஆம்பூர் ஊர்க்காவல் படை தளபதியாக பணியாற்றும் கதிரேசன் என்பவர், எங்களை எதிர்த்து பேசுகிறாயா என கூறி என்னை மிரட்டினார்.
இது குறித்து அப்போதைய திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தபோது, சிறப்பு உதவி ஆய்வாளர் குமரனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார். இதனால் கதிரேசன் என் மீது மிகுந்த கோபமுற்று, எனக்கு அதிக இன்னல் கொடுத்து வந்தார்.
குறிப்பாக, பணிக்கு சென்றால் அங்கு வந்து சிலர் மிரட்டும் வகையில் பேசுகிறார். மேலும் எனக்கு வரக்கூடிய சம்பள பணத்தையும் ஒரு மாத காலமாக வழங்கவில்லை. பின்னர், நேற்றைய முன்தினம் ஆம்பூர் அடுத்த சின்ன மலையாம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பணி முடித்துவிட்டு வரும்போது எனக்கு திருவண்ணாமலையில் நடைபெற்ற சித்ரா பௌணர்மி சிறப்பு பணிக்கு செல்லவில்லை எனவும், ஆம்பூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டதாகவும், மேலும் இது குறித்து விளக்கமளிக்க குறிப்பாணை வழங்க வேண்டும் எனவும் குறுஞ்செய்தி வந்தது.
எனக்கு திருமணமாகிய நிலையில், எனது மனைவி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்” என தெரிவித்தார். மேலும், இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, யுகேந்திரன் மற்றும் கதிரேசன் ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்து இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஷேர் ஆட்டோ - அரசுப்பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து! 3 பேர் பலி - உறவினர்கள் சாலை மறியல்